
சென்னை, மார்ச் 30
திமுகவின் ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டிடத்தை திறப்பதற்காக இன்று டில்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கிறார்.
ஏப்ரல் 2-ம் திகதி கலைஞர் அறிவாலயத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக இன்று மாலை டில்லி செல்கிறார். அதைத் தொடர்ந்து நாளை பிற்பகலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கிறார். அப்போது, நீட் தேர்வு விலக்கு, தமிழகத்துக்கான பேரிடர் நிவாரண நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்த உள்ளார்.
அதன்பின், ஏப்ரல் 1-ம் திகதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். வரும் 2024-ம்ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கூட்டணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சி எடுத்து வரும் நிலையில், ஸ்டாலினும் புதிய அணியை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஒருபகுதியாக இந்தச் சந்திப்பு நிகழும் என கூறப்படுகிறது.





