
கொழும்பு, மார்ச் 30
அந்நிய செலாவணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் எரிபொருள் இறக்குமதிக்கு பணத்தை செலுத்த முடியாத நிலை காணப்படுவதால் ஆழமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி சந்தைகள், வணிகங்கள், வர்த்தகங்களை புரட்டிப்போட்டுள்ள நிலையில் இலங்கையின் பல பகுதிகள் புதன்கிழமை நீண்டநேர மின்வெட்டினை எதிர்கொண்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிழையான நேரத்தில் வரிச்சலுகைகளை வழங்கியதாலும்,கொவிட் 19 பெருந்தொற்றின் தாக்கத்தினாலும், வரலாற்றுரீதியாக பலவீனமானதாக காணப்பட்ட அரசாங்கத்தின் நிதி நிலைமை காரணமாகவும் தசாப்தகாலத்தில் மிகமோசமான நிதி நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து உதவியை கோருகின்றது.
இலங்கையின் பங்குகள் 7 வீத வீழ்ச்சியை காண்பித்ததன் காரணமாக கொழும்பு பங்கு சந்தையை தனது நடவடிக்கையை இரண்டு தடவைகள் நிறுத்தவேண்டிய நிலையேற்பட்டது.
அந்நியசெலாவணி கையிருப்பு கடந்த இரண்டு வருடகாலப்பகுதியில் 70 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. பெப்ரவரியில் 2.31 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இதன் காரணமாக இலங்கை உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் 37000 தொன் எரிபொருளுடன் வந்துள்ள கப்பலில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு செலுத்தவேண்டிய பணம் 52 மில்லியன் டொலர் செலுத்தமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதே மின்சார துண்டிப்பு மேலும் பல மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளமைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
எங்களிடம் செலுத்துவதற்கு டொலர் இல்லை என அவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மின்வெட்டினை மேலும் அதிகரிக்கவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.





