ஜனாதிபதியின் அழைப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிராகரிப்பு.

அமைச்சுப் பொறுப்பை ஏற்க வருமாறு தமது கட்சிக்கு விடுக்கப்பட்ட ஜனாதிபதி அவர்களின் அழைப்பு தொடர்பாக நேற்று இரவு கூடிய கட்சியின் அதி உயர்பீடக்கூட்டம் மேற்படி ஜனாதிபதி அவர்களின் அழைப்பை நிராகரிப்பது என ஏகமனதாக தீர்மானித்ததாக கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி அவர்கள் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒட்டு மொத்த நாடும் GOTA GO HOME என வீதிக்கிறங்கி போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த எமது கட்சி ஒரு போதும் துணைபோகமாட்டாது மேலும் யாரை மக்கள் வீட்டுக்குச் செல்லுமாறு கூறி வீதிக்கிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அவரின் தலைமையில் மீண்டும் புதிய அமைச்சரவை அமையப் பெறுவது ஒரு கேலிக்கூத்தான விடயமாகும்.

இப்போது நடைபெற்றதாகக் கூறப்படும் அமைச்சரவை பதவித் துறப்பு என்பதும் ஒரு கண்துடைப்பு நாடகமன்றி வேறொன்றுமில்லை எனவே மக்களின் குரலுக்கு செவிசாய்த்து அரசு பதவி விலகவேண்டுமே ஒழிய மக்களை இன்னுமின்னும் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்வதே அரசாங்கத்துக்குள்ள நல்ல தெரிவாகும் இல்லையேல் மக்கள் போராட்டம் அதனைத் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply