வடகிழக்கில் இராணுமயமாக்கலை முடிவிற்குக் கொண்டுவருமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்து!

இலங்கையில் பாதுகாப்புத்துறைக்கு மிகையான நிதி செலவிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது, இது நாடு ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்துவதாகவும், இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியிருக்கின்றது.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் 2010 – 2019 வரையான காலப்பகுதியில் இராணுவத்திற்குச் செலவிடப்பட்ட நிதியானது, ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் செலவிடப்பட்ட நிதியை விஞ்சுவதாக அமைந்துள்ளது.

ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் 14.92 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்ட அரசாங்கம், போராட்டம் முடிவிற்கு வந்த பின்னரான 10 வருடகாலத்தில் 17.28 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டிருக்கின்றது. அதேபோன்று 2022 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கென பெருந்தொகையான நிதி (12.3 சதவீதம்) ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவை, அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது,

‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை நீக்குமாறும் அதன்மூலம் தமிழ்மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைகளை முடிவிற்குக்கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி தேசிய செலவுகளைக் குறைப்பதன் முதற்கட்டமாக அநாவசியமான இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply