
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பம் இட்டனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் அவற்றிற்கு பதில் வழங்கிய தமிழ்த் தேசிய முன்னணி,
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்றால் என்ன நம்பிக்கைத் தீர்மானம் என்றால் என்ன சட்ட வரைவுகள் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவு சிறிதும் இல்லாதவர்கள் தற்பொழுது கொண்டுவரப்படும் கோத்தா அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாதத் தீர்மானத்திற்கு ஆதரவாகத் தமிழ்த் தேசிய முன்னணி எடுத்துள்ள முடிவு பற்றிக் கருத்துகளை எழுதி வருகின்றனர்.
ஆட்சியாளருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்பது ஒரு நாடாளுமன்ற சம்பிரதாயமாகும். பெரும்பான்மை உள்ள அரசுக்கு எதிராகவும் அவ்வாறு தீர்ம்சானம் கொண்டு வருவது இயல்பு.நம்பிக்கை இல்லாத் தீர்மானம்தோற்றுப்போகும் என்று தெரிந்தும் அவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவார்கள்.
அதன் நோக்கம் அரசு செய்யும் தவறுகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் ஒரு வழியே தான் அது.நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது ஆட்சியை எதிர்ப்பவர்கள் நாடாளுமன்றத்தில் ஒருமித்து வாக்களிப்பர். அதே போல் ஆட்சியை ஆதரிப்பவர்களும் ஒருமித்துத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பர் இதைப்புரிந்து கொள்ளாத சிலர் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று கூறுவது நகைப்புக் கிடமானதாகும்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்காவிட்டால் அது ஆட்சியாளருக்குச் சார்பான முடிவாகவே கருதப்படும்.இப்பொழுது கஜேந்திரகுமாரின் தலைமையில் உள்ள கட்சி கோத்தாஅரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கைல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாகக் கையோப்பம் இட்டுள்ளது.இதை பேரம்பேசித்தான் செய்திருக்க வேண்டும் என்று சிலர் மணி கிலுக்கிக் கொண்டு சொல்லித் திரிகின்றனர்.
யாருடன் பேரம் பேச வேண்டும் .சஜித்திடம் பேரம் பேச வேண்டுமா?கொத்தாவின் மீது நம்பிக்கை இல்லையென்பது கட்சியின் முடிவு மட்டுமல்ல மக்களின் முடிவுமாகும்.
அப்படியிருக்கையில் சஜித்துடன் என்ன பேச வேண்டியுள்ளது. பேரம் பேசுவது என்றால் ஆட்சி அமைக்க ஆதரவு கோரினால் நிபந்தனைகளை விதித்துப் பேரம் பேசுவது தானே முறை.
இவற்றை நிறைவேற்றித் தருவது என்றால் ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என்று கூறலாம் வேறு ஒருவரின் ஆட்சியில் நம்பிக்கை இல்லை என்று நாம் முடிவெடுத்து விட்டு அப்படி இல்லை அத்தீர்மானத்தை ஆதரிக்க வேறொரு கட்சிக்கு நிபந்தனை விதிப்பது என்பது அறிவுள்ளவர்களின் செயலாக இருக்க முடியாது.
கொத்தாவின்மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் அவர் பதவி விலகும் சூழ்நிலையில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது வேறு ஒரு வகையான முடிவாகும். அவ்வாறு ஆட்சி அமைப்பவர் சஜித் ஆக இருக்கலாம்,ரணிலாக இருக்கலான் அனுராவாக இருக்க்சலாம் மைத்திரியாகவும் இருக்கலாம். அதை எண்ணி நாம் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிக்காமல் இருக்க முடியாது.
வருகின்ற எந்த நபரும் தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் ஏற்கப்போவதில்லை. எனவே அவர்கள் ஆட்சி அமைக்க யாரும் ஆதரவு கொடுக்கப்போவதில்லை.
இதை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துடன் முடிச்சுப் போடுவது என்பது அரசியல் அறிவீனம் என்று தான் கருத முடியும்.நாடாளுமன்றத்தில் ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களை தமிழினத்தின் நலன் கருதி எதிர்ப்பது தான் உண்மையான தெளிந்த அரசியல் சிந்தனையாகும் என குறிப்பிட்டுள்ளது.





