முட்டாள் காரணங்களைச் சொல்லி, மக்களை முட்டாளாக்க கூடாது! மனோ எம்.பி

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்போரும், நடுநிலை வகிப்போரும் மக்கள் மன்றங்களில் துகிலுரியப்படுவார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மேலும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் கூட்டணிக்குப் பெரும்பான்மை இல்லை. ஏனைய எதிர்க்கட்சிகளைச் சேர்த்தாலும் பெரும்பான்மை இல்லை.

இது எமக்கு தெரியும். இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல. எனினும் இதை நாம் சபையில் வாக்கெடுப்புக்குக் கொண்டு வருவோம்.

அப்போது நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் யாரென அறியும் வாய்ப்பு வருகிறது.

இன்று தெற்கு, மலையகம், மேற்கு, வடக்கு, கிழக்கு என நாடு முழுக்க அரசை எதிர்த்துப் போராடும் மக்கள், தாங்கள் வாக்களித்துத் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலட்சணங்களை அறிய அரிய வாய்ப்பு வருகிறது.

எதிர்ப்போரும், நடுநிலை வகிப்போரும் மக்கள் மன்றங்களில் துகிலுரியப்படுவார்கள். நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி கோட்டாபயவின் ஒட்டு மொத்த அரசாங்கத்துக்கும் எதிரானதாகும்.

அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணிக் கட்சியாக நாமும் இணைந்தே இதை கொண்டு வருகிறோம். இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தனிநபர்களுக்கு எதிரானது என காட்டி தப்ப எவரும் முயலக்கூடாது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் நாம் அவசிய நடவடிக்கைகளை எடுப்போம்.

ஆனால் இது முதலில் முழு அரசாங்கத்துக்கும் எதிரானதாகும். அரசாங்கத்திலிருந்து வெளியே வந்ததாகச் சொல்லும் அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும்.

முட்டாள் காரணங்களைச் சொல்லி எவரும் மக்களை முட்டாளாக்க முயலக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply