
தமிழர்களது உரிமைகளும் வலியுறுத்தப்படும் இடத்திலே நாங்களும் போராட்டத்தில் இணைய தயாராக உள்ளதாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவிப்பு!
தமிழர்களினுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி ,சர்வதேச விசாரணை, ஆகிய தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்களவர்களும் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவார்களாயின் அவர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.
தற்போது ஜனாதிபதியையும் ஜனாதிபதி சார்ந்தவர்களையும் வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் தொடர்ச்சியாக சில நாட்களாக இடம்பெற்று வருகின்றது. இந்தப் பொருளாதாரச் சிக்கல், எரிபொருள், மின்சாரம் இல்லாத நிலைமை ஒரு மனிதனின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகள் தான். அதனை நாங்கள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் எங்களுடைய வடக்கு கிழக்கு தமிழர்கள் மின்சாரம் அறவே அற்ற நிலையிலும் எரிபொருள் தடுக்கப்பட்ட நிலையிலும் வாழ்ந்திருந்தோம்.
எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கோத்தா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.எங்களுடைய கேள்வி கோத்தாவை வீட்டுக்கு அனுப்புவதால் மட்டும் என்ன பிரயோசனம். எனவே சர்வதேச நீதிமன்றில் ராஜபக்ச குடும்பத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது, சர்வஜன வாக்கெடுப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும், இன அழிப்பினை வலியுறுத்துவது, மேலும் சுயநிர்ணய கோரிக்கைகளை ஏற்று எங்களுக்காகவும் சிங்களவர்கள் வலியுறுத்துவார்கள் எனில் அவர்களுடன் இணைந்து காலிமுகத்திடலில் போராடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.





