இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் கவனம் செலுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு ஆரம்பகால உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பிவைக்க உரிய அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அன்பு நிறைந்த தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.வடக்கு கிழக்கு தமிழர்களுக்காக நிவாரணப்பணிகளை தமிழக அரசு வழங்க முன்வந்திருந்த போது, உணவும் மருந்தும் எம் அனைவருக்கும் வழங்குங்கள் என தமிழர் மரபோடு நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இலங்கை மக்கள் அனைவருக்குமாக 80 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் 137 மருந்துப் பொருட்கள், 15 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை வழங்க எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு எமது மக்கள் சார்பிலான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.