ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டாயம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் பல ஆயுதங்கள் இருப்பதாகவும் அவை அனைத்தையும் பயன்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்தை திரட்டி வருகின்றோம். முறைமையை மாற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். இதனால், நாங்கள் பெரும்பான்மை பலத்தை திரட்டி வருகின்றோம்.
யார் ஆதரவளிக்கின்றனர், யார் ஆதரவளிக்கவில்லை என்பதை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம். அப்போது மக்கள் அறிந்துக்கொள்வார்கள்.
நாங்கள் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். நாங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தாலும் இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு பிரேரணையை கொண்டு வரும் ஏற்பாடுகளும் அரசியலமைப்புச் சட்டத்திற்குள் இருக்கின்றது. நாங்கள் அதனையும் ஆராய்ந்துள்ளோம்.
அதனை நாங்கள் படிப்படியாக செய்ய வேண்டியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 44 வது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வர முடியும். அதனையும் நாங்கள் செய்வோம்.
ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி வைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் நாங்கள் பயன்படுத்துவோம். இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது அதில் இருந்து ராஜபக்சவினருக்கு தப்பிக்க முடியாது.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகிறது. அது நாட்டுக்கு தேவையில்லை. குடும்பத்தில் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் பிரச்சினை இருந்தால், அது நாட்டுக்கு பிரச்சினையில்லை.
அதனை வீட்டுக்கு சென்று தீர்த்துக்கொள்ளுங்கள். ஆளும் கட்சியில் உள்ள சிலர் தாம் சுயாதீனமாக இயங்குவதாக கூறுகின்றனர். இவர்களில் சிலர் உண்மையில் சுயாதீனமாக செயற்படுகின்றனர்.
ஆனால், மேலும் சிலர் கோட்டாபய, மகிந்த அல்லது பசிலுக்கு ஆதரளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். எமக்கு அவை தேவையில்லை. எமக்கு நபர்கள் முக்கியமல்ல, நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. பொருளாதார நெருக்கடி படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதனை அதிகரிக்க இடமளிக்க முடியாது. உணவு மற்றும் வங்கி நெருக்கடியாக இந்த பொருளாதார நெருக்கடி மாற இடமளிக்க முடியாது. அதற்கு முன்னர் எப்படியாவது இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும்.
இதன் காரணமாகவே நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றோம். தனி நபர்களின் பிரச்சினைகள் எமக்கு தேவையில்லை. ராஜபக்சவினர் அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே நாங்கள் கூறுகின்றோம் என எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.