பீஜிங், ஏப் 30
சீனாவில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிப்பவர்கள். கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்த மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர்.
கொரோனா தாக்கம் குறைந்தநிலையில், சீனாவில் கல்வி நிலையங்கள் நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்திய மாணவர்களும் தங்கள் படிப்பை தொடர சீனாவுக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில், விமான போக்குவரத்தை சீனா நிறுத்தி விட்டது. இந்திய மாணவர்களுக்கு விசா வழங்க மறுத்து வருகிறது.
இதனால், இந்திய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில்தான் படிக்க முடிகிறது. இப்பிரச்சினையை சீன அரசின் கவனத்துக்கு இந்தியா எடுத்துச் சென்றது. இருந்தாலும், சீனா இழுத்தடித்தது. இந்தநிலையில், திடீர் திருப்பமாக சீனா இந்திய மாணவர்களுக்கு பச்சைக்கொடி காண்பித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:- இந்திய மாணவர்கள் படிப்பை தொடர சீனா வருவதற்கு சீனா உயர் முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவுக்கு திரும்பிய மற்ற நாடுகளின் மாணவர்கள் பின்பற்றிய நடைமுறையையும், அனுபவத்தையும் இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
இந்திய மாணவர்கள் சீனாவுக்கு வருவதற்கான பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தியா செய்ய வேண்டியதெல்லாம், எந்தெந்த மாணவர்கள் உண்மையிலேயே அவசியம் சீனாவுக்கு திரும்ப வேண்டியவர்கள் என்ற பட்டியலை அளிப்பதுதான். அந்த மாணவர்களை நாங்கள் அனுமதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.