“வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச அரசை நாம் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.”
- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்படும் கட்சி தாவல்கள் முழுமையான சூதாட்டம். அந்தக் குப்பை மேட்டில் ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய மக்கள் கூட்டணியோ விழப்போவதில்லை.
இன்று அமைச்சுப் பதவிகளும், பிரதமர் பதவியும் ஏல விற்பனை சூதாட்டத்துக்கு விடப்பட்டுள்ளது. இந்த நாற்காலி பரிமாற்றத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை உருவாக்கிய அரசு இன்று நாட்டை அதல பாதாளத்துக்குள் தள்ளியுள்ளது.
இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பலம் ஐக்கிய மக்கள் சக்திக்கே இருக்கின்றது” – என்றார்.