புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் நாளை இறுதி செய்யப்படுமா? நேசக்கரம் நீட்ட சிறு கட்சிகள் தயார்

அமைச்சரவையை அமைப்பது குறித்து தாம் முடிவு செய்யவில்லை என புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள வளுகாராமய ரஜமஹா விகாரைக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் நாளை தினத்துக்குள் இறுதிப்படுத்தப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானிக்கும் ஓர் தினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.

அமைச்சுகளுக்கான விடயதானங்கள், அமைச்சுகளின் கீழ்வரும் நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் குறித்த ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க இன்று (12) நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சரவையில் 20 பேர் இடம்பெறக்கூடும். நிதி மற்றும் நீதி அமைச்சு பதவிகள் அலி சப்ரியிடமே கையளிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு முடிவடைந்த பின்னர், நிதி அமைச்சு பதவியில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவந்த நிலையில், வன்முறைகளுக்கு மத்தியில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச துறந்தார்.

இதனையடுத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே இது சாத்தியம்படும் என சஜித் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்’ என்பதில் தேசிய மக்கள் சக்தியும் உறுதியாக நின்றது.

இதனையடுத்தே பிரதமர் பதவிக்கு, ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *