
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உள்ள அதிகாரங்களை விட்டுக்கொடுத்து மக்களுக்கு தீர்ப்பு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
நான் மே 10ஆம் திகதி மாலை ஜனாதிபதியை சந்தித்தேன். மக்கள் விரும்புவது அவரின் இராஜினாமா மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.
ஜனாதிபதி என்னிடம் “நான் நாளையே பதவி விலகுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்றார்.
அவர் நாளை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதைச் செய்ய முடியாது. ராஜினாமா செய்ய ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயித்து, அனைத்துக் கட்சி ஆட்சியை அமைத்து, இதை ஒன்றாக எதிர்கொள்ளலாம் என்று நான் அவரிடம் கூறினேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எவ்வித நிபந்தனையுமின்றி பிரதமர் பதவியை கைப்பற்றினார். இப்போது என்ன நடந்திருக்கிறது? இப்போது அரச தலைவர் பதவி விலக மாட்டேன் என்று கூறுகிறார்” என குறிப்பிட்டார்.
பிற செய்திகள்