
கண்டி, ஜுன் 14
இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இன்று ஆரம்பமானது.
இந்த தொடரின் முதலாவது போட்டி கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.
அதற்கமைய, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் நுழைந்த தனுஷ்க குணதிலக்க மற்றும் பெத்தும் நிஸங்க ஜோடி சிறப்பான இணைப்பாட்டத்தினை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு சிறப்பான அடித்தளத்தை இட்டனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஜோடி இணைப்பாட்டமாக 115 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில், 19 ஓவரின் 4 ஆவது பந்தில் இலங்கை அணி (115 ஓட்டங்களில்) முதலாவது விக்கெட்டை இழந்தது.
53 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றிருந்த தனுஷ்க குணதிலக்க ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களம் நுழைந்து இறுதிவரை நின்ற குசல் மெண்டிஸ், நிதானமான துடுப்பாட்டத்தால் 87 பந்துகளில் ஆட்டமிழப்பின்றி 86 ஓட்டங்களை பெற்றார்.
ஆரம்பதுடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸங்க 68 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றதுடன், சரித்த அசலங்க 42 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றார்.
ஏனைய, வீரர்கள் ஒன்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்த நிலையில், இறுதியாக களம் நுழைந்த வனிந்து ஹசரங்க 19 பந்துகளில் 37 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்து இறுதி ஓவரின் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் அஸ்டன் அகர் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மர்னஸ் லபுஸ்சன்சே 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி மொத்தமாக 300 ஓட்டங்களை பெற்று, 301 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.