மின்சார சபையின் முன்னாள் தலைவர் தொடர்பில் கோப் குழு மேற்கொள்ளவுள்ள தீர்மானம்

சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினண்டோ தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போது, இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்னாண்டோ, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கோரியத்தற்கு இணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அழுத்தம் பிரயோகித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்திருந்ததன் பின்னர், இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர், கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

கோப் குழுவில் வினவப்பட்ட கேள்விகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தாம் இந்திய பிரதமர் தொடர்பான கருத்தை வெளியிட்டதாகவும், அதனை மீளப் பெறுவதாகவும் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினண்டோ குறித்த கடிதத்தில், சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத், தெரிவித்தார்.

அந்த கடிதம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் எதிர்வரும் வாரத்தில், அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, எரிசக்தி திட்டங்களுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக இலங்கை அதிகாரி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக, இந்தியாவின் அதானி குழுமம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அதானி நிறுவனத்தின் பேச்சாளர் வழங்கிய செவ்வியில் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ நேற்று அந்த பதவியில் இருந்து விலகினார்.

அவ்வாறான பின்னணியின் அதானி குழுமம் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அண்டைய நாடு என்ற வகையில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தமது நிறுவனம் எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும் அதானி நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எம்.எம்.சி பெர்டினண்டோவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *