
விவசாயத்துறையில் இளைஞர்களை எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்த யோசனைகளை அகில இலங்கை வேலையற்றோர் சங்கம் தன்னிடம் முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை வேலையற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்றைய தினம் விவசாய அமைச்சரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இளைஞர் குழுவொன்று இன்றைய தினம் என்னை சந்தித்து சில யோசனைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பத்தை குறித்த இளைஞர் குழுவினர் என்னிடம் கோரியிருந்தனர்.
அரச தொழிலை பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் கலந்துரையாடலுக்கான அவகாசத்தை கோருவதாக நினைத்தேன்.
எனினும் குறித்த தரப்பினர் விவசாயத்துறையில் எவ்வாறு இளைஞர், யுவதிகளை உள்வாங்குவது என்பது குறித்தான யோசனைகளே முன்வைத்தனர்.
இது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே அவர்கள் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அந்த யோசனைகளை செயற்படுத்துவதற்கு அவர்களது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
இளைஞர்கள் என்ற முறையில் அரசாங்க தொழிலையே பார்த்துக்கொண்டு இருக்காமல் இவ்வாறான செயற்பாடுகளிலும் இளைஞர் சமூகம் ஈடுபடுவதை நினைத்து நான் பெருமைக்கொள்கின்றேன். வெற்றிகொண்ட இளைஞர்கள் கூட்டமொன்று சமூகத்தில் உள்ளது.
அரசாங்கத் தொழிலை எடுத்துக்கொண்டால் 50,000, 60,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் அரசாங்கத் தொழிலிலிருந்த விலகிசென்ற இளைஞர்கள் தற்போது 100 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் உயர்ந்துள்ளனர். அந்த 100 பேரில் பட்டம்பெற்ற தரப்பினரும் உள்ளனர். அவர்கள் சிறந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் சம்பிரதாயப்பூர்வமான விவசாயத்தை மேற்கொள்ளும் அதேவேளை தொழில்நுட்ப ரீதியிலான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று, வணீக ரீதியில் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
பயிரிடப்படாத நிலங்களை அரசாங்கத்தின் வசப்படுத்தி ஐந்து வருடங்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்