கோப் குழுவுக்கான தலைவர்களை நியமிப்பதில் தாமதம்- சஜித் கேள்வி!

நாடாளுமன்ற கண்காணிப்பு அமைப்புகளான பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) மற்றும் பொது கணக்குகள் குழு (கோபா) ஆகியவற்றிற்கான தலைவர்களை நியமிப்பதில் தாமதம் குறித்து இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில்,தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம் மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் கோப் மற்றும் கோபா ஆகியவற்றிற்கு நியமிக்கப்பட வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொண்டார் என்று நாடாளுமன்றில் வைத்து சஜித் நினைவுப்படுத்தியுள்ளார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏற்கனவே பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கோப் மற்றும் கோபா தலைமை நியமனங்களை வழங்குவதற்காக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை, அரசாங்கம் இடைநிறுத்தப் போகின்றதா என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இருப்பினும்,தற்போது நாட்டிற்கு வெளியே உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் அடுத்த கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என அவைத் தலைவரும், கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பதில் அளித்துள்ளார்.

எவ்வாறாயினும், போராட்டக் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் செல்லுபடியாகாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply