நீர்கொழும்பு தாழுவகொட்டுவ பிரதேசத்தில் நேற்றிரவு 7 மணி அளவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீனவர்களோடு சந்திப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது அதிக எண்ணிக்கையான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
மீனவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அங்கு சஜித் பிரேமதாசவிடம் எடுத்துக் கூறினர்.
எரிபொருள் பிரச்சினை, எரிபொருள் விலைகள் அதிகரிப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பு, மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு உட்பட தமது தொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் பலவற்றை அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்து கூறினர்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஹர்சன ராஜகருணா உட்பட பலரும் பங்குபற்றினர்.
மீனவர்களுடைய பிரச்சினைகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையில் எதிர்க்கட்சித் தலைவர் பின்வருமாறு தெரிவித்தார்.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அடுத்த வாரம் அளவில் பாராளுமன்றத்தில் உரையாற்ற இருப்பதாகவும், தான் ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களுக்கு பல நலன்புரி வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாகவும் குறிப்பாக மீனவர்களுக்கான காப்புறுதி வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தற்போது மயக்கமுற்று விழுகின்றனர். அவர்களுக்கு சரியான உணவு கிடையாது.

இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போசணை வேலை திட்டம் தொடர்பிலும் பிரச்சினை உள்ளது. ஆயினும் 38 இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது.
அதற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்குவதற்கு பணம் இல்லை. பாடசாலைகளுக்கு கணணிகளை வழங்குவதற்கு பணம் இல்லை. நாடும் திவால் ஆகி உள்ளது. அரசும் திவாலாகியுள்ளது.
ஆயினும் எதிர்கட்சியான நாங்கள் இன்றைய சிறுவர் தினத்தில் கொழும்பு இந்து கல்லூரிக்கு 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஸ் ஒன்றை அன்பளிப்பு செய்தோம். நாங்கள் இதுவரை 52 வைத்தியசாலைகளுக்கு 154 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெருமதியான வைத்திய உபகரணங்களையும் மருந்து வகைகளையும் அன்பளிப்பு செய்துள்ளோம். இதற்காக தனபந்தர்களும் எமது கட்சி மந்திரிமார்களும் உதவி புரிந்துள்ளனர்.
உலக சந்தையில் எரிபொருள்களின் விலை குறைந்துள்ளது. ஆயினும் அரசாங்கம் இன்றைய தினம் சிறிய அளவில் பெட்ரோலின் விலையை குறைத்துள்ளது. ஆனால் எரிபொருள், எரிவாயு, உரம் கொள்வனவின் போது ஊழல் மோசடிகளை செய்வது குறைவடையவில்லை.
எமது நாட்டுக்கு எமது கடல் எல்லையில் இருந்து 200 கடல் மைல் தூரத்திற்கு கடல் வளம் உள்ளது. இந்த வளங்களை பயன்படுத்தி அதிக வருமானத்தை எங்களால் பெற முடியும். ஆனால் இந்த அரசாங்கம் என்ன செய்கிறது? நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களுக்கு பல நலன்புரி வேலைத் திட்டங்களை ஆரம்பிப்போம். மீனவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை ஆரம்பிப்போம். மீனவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை விரிவுபடுத்துவோம் என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்





