ரத்மலானா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரின் உடைமைகளில் இருந்து 3 கிலோகிராம் மற்றும் 125 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.





