பொலிஸ் அதிகாரிகளிடம் இலஞ்சம் பெற்ற வீரசேக: ஜனாதிபதியிடம் முறைப்பாடு!

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றத்தை பெற்றுக்கொடுக்க மூன்று முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை இலஞ்சமாக பெற்றமை சம்பந்தமாக அமைச்சர் ஒருவர் மீது பாரிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொஸ்கமை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியை அவிசாவளை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றியமையை உதாரணமாக காட்டியுள்ளதுடன் இப்படியான பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், தன்னால், காவல் துறையில் ஒழுக்கத்தை பாதுகாப்பது சிரமம் என பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர தற்போது கொரோனாத் தொற்றுக் காரணமாக அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் குணமடைந்த பின்னர் உடனடியாக கோட்டாபய இது சம்பந்தமாக முடிவு ஒன்றை எடுப்பார் என பொலிஸ் திணைக்களத்தில் பலர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply