ஜூனியர் உலக கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆப்கானிஸ்தான்

ஆண்டிகுவா, ஜனவரி 28: ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியை அபாரமாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குரூப் சி பிரிவில் 2ம் இடம் பிடித்த ஆப்கானிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் கால் இறுதிப் போட்டியில் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில், அப்துல் ஹாதி 37 ரன்னும், நூர் அகமது 30 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் வினுஜா ரன்புல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியினரின் அசத்தலான பீல்டிங்கில் இலங்கை அணி சிக்கியது.

இலங்கை அணித் தலைவர் துனித் வெல்லலகே அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். 45வது ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்த ஆட்டத்தில் 4 பேர் ரன் அவுட்டாகினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 4 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் பிலால் சமி 2 விக்கெட், நூர் அகமது, நவீத் சட்ரான், இஜாருல்லா நவீத் மற்றும் கரோடே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினர் உதிரிகளாக 34 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply