மட்டக்களப்பில் போராட்டத்தில் குதித்த முச்சக்கரவண்டி சாரதிகள்…!பொலிஸாரின் தலையீட்டால் நிறைவு…!samugammedia

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு முன்பாக இன்று முச்சக்கரவண்டி சாரதிகள் நடாத்திய போராட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸாரின் உறுதிமொழியையடுத்து கைவிப்பட்டது.

களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியில் முச்சக்கர வண்டிசேவையில் ஈடுபடுவோர் வெளியிடங்களிலிருந்துவரும் முச்சக்கர வண்டி சாரதிகளினால் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் அதனை தடுக்குமாறு கோரி பிரதேசசபைக்கு முன்பாக நூற்றுக்கணக்கான முச்சக்கர வண்டிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கர வண்டி சாரதிகளின் பிரச்சினை தொடர்பில் பிரதேசசபையின் செயலாளர் சா.அறிவழகன் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேசசபை உத்தியோகத்தர்கள்,முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு வெளியிலிருந்துவரும் முச்சக்கர வண்டிகள் தங்களை தொழில் செய்யவிடால் அவர்கள் சேவையில் ஈடுபடுவதன் காரணமாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் தொழில் செய்யும் முச்சக்கர வண்டி சாரதிகள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதேசசபையினால் ஒதுக்கப்பட்ட இடங்களில் தாங்கள் சேவையில் ஈடுபடும் நிலையில் வேறு இடங்களிலிருந்து வருபவர்கள் அந்த ஒழுங்கு நடைமுறையினை மீறிய வகையில் செயற்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதன்போது பிரதேசசபையினால் ஒதுக்கப்பட்ட இடங்களில் தாங்கள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளை பொலிஸாரின் ஒப்புதலுடன் காட்சிப்படுத்தவும் சில போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றவும் தீர்மானிக்கப்பட்டதுடன் ஒரு வாரத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் உறுதிமொழியளிக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

Leave a Reply