இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும் – ஜீவன் தொண்டமான் கடும் அதிருப்தி! samugammedia

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழ் உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் “இனத்தைக் குறிப்பிடும் போது இந்திய தமிழ் / சோனகர் என்பதை இலங்கைத் தமிழ்/ சோனகர் என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்” எனும் தலைப்பின்கீழ் பதிவாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் தொடர்பில் அமைச்சர் தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தாக ஜனாதிபதி மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரான, பிரதமர் ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பதிவாளர் நாயகத்தின் யோசனையுடன் நாம் உடன்படவில்லை. எமது மக்களுக்கு 200 வருடகால அடையாளம் உள்ளதுடன்  200 ஆவது வருடத்தில் எமது அடையாளத்தை அழிப்பதற்கு முற்படுகின்றனர். இதனை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை பெற முற்படுவோம்.

எமது மக்கள் போரிடவும் இல்லை, தனி நாடு கோரவும் இல்லை. தனி அடையாளத்தைதான் கோருகின்றனர். அதனையும் அழிக்க முற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. இலங்கை தமிழர் என பதிவு செய்தால் அது பெரும் அநீதியாக அமைந்துவிடும். 30 வருடங்கள் பிரஜா உரிமை இல்லாமல் வாழ்ந்தோம், எமது தொழிலாளர்கள் அடிமைகள்போல் வழிநடத்தபபடுகின்றனர், தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான நகர்வுகளும் இல்லை எமக்கு எமது அடையாளம் வேண்டும். எனவே, மேற்படி யோசனையை ஆதரிக்க முடியாது. அதனை எதிர்ப்போம்.” – என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *