வடக்கு கிழக்கு மாகாணத்தில் இன்று ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளபோதிலும் ஏனைய சேவைகள் வழமைபோன்று நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகள் வழமைபோன்று இயங்குவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுப் போக்குவரத்துகள் அனைத்தும் இயங்குவதை காணமுடிகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஆகியவற்றினை கண்டித்து தமிழ் தேசிய கட்சிகளினால் இன்று ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் வழமைபோன்று நடைபெற்றுவருகின்றது. இரண்டாம் தவனை பரீட்சை நடைபெறுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து வலயங்களிலும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சில பாடசாலைகளில் பாடசாலை மாணவர்கள் குறைவாக காணப்பட்டபோதிலும் பெரும்பாலான பாடசாலைகள் இயங்குவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகர் உட்பட பெரும்பாலான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தபோதிலும் ஒரு சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
அதேவேளை முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் வழமைபோன்று நடைபெற்றன.
அரச திணைக்களங்கள்,வங்கிகள்,தனியார் வங்கிகள் வழமைபோன்று தமது செயற்பாடுகள் முன்னெடுத்ததுடன் பொதுமக்களின் வருகையானது குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.