புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட கொம்பு யானை! samugammedia

புத்தளம், சாலியவெவ பிரதேச செயலகத்திற்கட்பட்ட நீலபொம்ப கிராமத்தின் வீடு ஒன்றுக்கு அருகாமையில் உள்ள தனியார் காணியொன்றில் யானையொன்று இன்று (22) காலை உயிரிழந்துள்ளது. 

சுமார் 25 வயது மதிக்கத்தக்க கொம்பு யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்துள்ள கொம்பு யானையின்  உயரம் சுமார் 8 முதல் 9 அடி எனவும் யானையின் கொம்பு சுமார் இரண்டு அடி நீளம் எனவும் கருலகஸ்வெவ வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறித்த கொம்பு யானை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் எனினும் உடற்கூறு பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய முடியும் எனவும் கருலகஸ்வெவ வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் கூறினர்.

குறித்த கொம்பு யானையின் பிரேதப் பரிசோதனையை வடமேல் மாகாண வனஜீவராசித் திணைக்கள கால்நடை வைத்தியர் இசுரு ஹேவாகொட்டுகே மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த கொம்பு யானை எவ்வாறு உயிரிழந்தது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுடன் சாலியவெவ பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த கொம்பு யானையை பார்வையிடுவதற்காக சாலியவெவ பிரதேச செயலகத்திற்கட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வருகை தந்திருந்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் காட்டுயானைகள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன், மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறையான மின் வேலிகள் அமைக்கப்படாமையே இவ்வாறு காட்டு யானைகள் மக்கள் குடிமனைகளுக்குள் உள்நுழைய காரணமாக அமைகிறது என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply