ஏழை மக்களுக்கு எட்டா கனியாக உள்ள சமுர்த்தி நிவாரணம் – பிரதேச மக்கள் புகார்! samugammedia

மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை 320/c கவரவில கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஆறு தோட்டங்களை சேர்ந்த வரிய மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் செல்வந்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மட்டுமே சமுர்த்தி நிவாரணம் பயனுள்ள வகையில் உள்ளதாக பிரதேச மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சமுர்த்தி அதிகாரிகளின் தரகர்களாக செயல்படும் அவர்களின் உறவினர்களுக்கு இத்திட்டம் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது மேலும் சமுர்த்தி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆடு தையல் இயந்திரம் கூரை தகடு என்பன இவர்களது உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் தமக்கான தீர்வு இது வரை கிடைக்கவில்லை எனவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் வழங்கப்பட்ட சமுர்த்தி நிவாரணத்தில் வழமைக்கு மாறாக ஐயாயிரம் ரூபாய் குறைவாக வழங்கப்பட்டதாகவும் இது குறித்து கேட்டபோது பயனாளிகளின் பேரப்பிள்ளைகளுக்கு குறித்த தொகை சேமிப்பில் இடப்படும் என்று சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் முதியோர்கள் குறித்த அதிகாரிகளினால் உதாசீனம் செய்து வெளியேற்றப்படுகின்றனர்.

இப்பகுதியில் சமுர்த்தி திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஊழல்கள் இடம்பெற்றுள்ளது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply