தென்மராட்சி பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா…!samugammedia

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும் தென்மராட்சி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா இன்று(08) காலை  9.00 மணிக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான திருவாட்டி உஷா சுபலிங்கம் தலைமையில் இடம் பெற்றது 

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் சி.சுரேந்திரனும் கலந்து கொண்டனர். 

சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் இருந்து நாதஸ்வர இசையுடன் நட்டுவாங்கம் முழங்க  உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், வரணி மத்திய கல்லூரி , கைதடி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் தமிழ் இன்னிசை நிகழ்வுடன் விருந்தினர்கள்  நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் 

தென்மராட்சி பிரதேச கலாசார பேரவை உபதலைவரும் சைவப்புலவருமான கா.கமலநாதன் மிருதங்க வித்துவான் அமரர் ஆழ்வான் வல்லியின் அரங்கத் திறப்புரையினை ஆற்றினார் 

கைதடி இயல் சேத்திரா கல்வி மன்ற மாணவிகளின் வரவேற்பு நடனமும்,மீசாலை சிவசக்தி சங்கீத நர்த்தனாலய மாணவிகளின் சிவன் நடனம் , சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள் , சாவகச்சேரி மகளிர் கல்லூரி மாணவிகள், யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள்,கச்சாய் மகா வித்தியாலய ஆசிரியர்கள் ஆகியோரின் பல இசைக் கருவிகள் ஒன்று சேர்த்து வழங்கிய பல்லியம் இசை நிகழ்ச்சியும், பூர்ணா நர்த்தனாலய மன்றத்தினைச் சேர்ந்த  சாவகச்சேரி மகளிர் கல்லூரி மாணவிகளின் கிராமிய நடனம், கைதடி இயல் சேத்திரா கலை மன்ற மாணவிகளின் காலிங்க நர்த்தன நடனம் ஆகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன 

மாண்புறு மாணவ சமுதாயம் மாணவர் திறன் விருத்தி போட்டி பேச்சு , கட்டுரை சுவரொட்டி ஓவியம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான  ஓவியப் போட்டி மற்றும் தேசிய கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன 

கலைஞர்கள் இளங்கலைஞர் விருது மற்றும் கலைச்சாகரக விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்

நவயோதி நாடக மன்றத்தினரின் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற நகைச்சுவை நாடகம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *