வடக்கு கிழக்கிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் வருவது குறைவு – அங்கஜன் எம்.பி சுட்டிக்காட்டு samugammedia

 

யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகியும் வடக்கு கிழக்கிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் வருவது வெகு குறைவாகவே உள்ளது என சுட்டிக் காட்டிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தம்புள்ளயை தாண்டினால் கிரிக்கெட் மைதானம் கூட கிடையாது என கவலை வெளியிட்டார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக இன்று கொழும்பில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

கிரிக்கெட்டை வயது வேறுபாடின்றி அனைவரும் பார்க்கின்றனர்.ஆனால் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது செல்கின்ற போக்கு மிக மிக கவலை அளிக்கின்றது.

பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் இணைந்து அரசு தரப்பு எதிர் தரப்பு என்று இல்லாமல் மக்களின் மனநிலையை ஏற்றுக் கொண்டு இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒரு தீர்மானத்திற்கு முன் வந்திருக்கின்றார்கள்.

இலங்கை கிரிக்கெட் சபையில் உள்ள முகாமைத்துவமற்ற உறுப்பினர்களாலே இலங்கை கிரிக்கெட் இந்தளவு நிலைமைக்கு போய் உள்ளது.

அதிகளவு பணம் வெளிநாட்டு முதலீடுகள் குவிகின்ற இடமாக இலங்கை கிரிக்கெட் சபை காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் ஒரு புதிய இளம் வீரர்களை அறிமுகப்படுத்தாதது பெரிய கேள்வியாக காணப்படுகின்றது.

யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகியும் வடக்கு கிழக்கிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் வருவது வெகு குறைவாகவே உள்ளது. தம்புள்ளயை தாண்டினால் மைதானம் கூட கிடையாது.

வடக்கில் மைதானத்தை உருவாக்குவதற்கு பல முயற்சிகள் நடந்த போதும் கூட இதுவரை அது சாத்தியமாகவில்லை. 

இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தும் கூட அதை செய்வதற்கு அவர்களும் தயார் இல்லை

வியாஸ் காந்த் என்ற வீரர் எல்பில் ஊடாக அறிமுகமாகி சர்வதேச பிரீமியர் லீக் விளையாடினால் கூட இலங்கை தேசிய அணியில் இடம் பெறவில்லை.

யுத்த காலத்தில் விளையாட்டு துறை சார்ந்த அபிவிருத்தி வடக்கு கிழக்கில் ஏற்படவில்லை இதனை ஏற்படுத்துவதற்கு அரசு மட்டும் போதாது. இலங்கை கிரிக்கெட் சபை போன்ற சுயாதீனமான நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொன்னது போன்று பாடசாலைகளுக்கு கிரிக்கெட்டை கொண்டு சென்று அதன் மூலம் இளைய தலைமுறையை உள்ள வாங்க வேண்டும். கலை விளையாட்டு மூலம் நாட்டில் நல்லிணக்கம் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்.

நேற்றைய பாராளுமன்ற தீர்மானம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபை முகாமைத்துவம் நீக்கப்பட்டு புதிய கிரிக்கெட் தொடர்பிலான சட்டங்கள் உருவாக்கப்படும்- என்றார்.

Leave a Reply