அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முயற்சி…! அரச தரப்பினரை பயங்கரவாத தடை சட்டம் கைது செய்யுமா? அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி…! samugammedia

அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முயற்சித்த அரச தரப்பினரை பயங்கரவாத தடை சட்டம் கைது செய்யுமா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரால் இன்று(10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்து 15 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான முல்லைத்தீவை சேர்ந்த கனகரத்தினம் ஆதித்தன், மாத்தளையை சேர்ந்த சுப்ரமணியம் சுரேந்திரன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா நிரோசன் ஆகியோர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 26 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து அவர் சென்ற வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தினர் எனும் அடிப்படை அற்ற குற்றச்சாட்டின் பேரில் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலேயே இன்று மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமண அவர்களால் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு விதமான கொடூர சித்திரவதைகளை தொடர்ந்து அரசு தரப்பால் குற்றவாளிகளாக்கும் நோக்கில் இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்புக்கு 10 வருடங்கள் கடந்துள்ளதோடு பத்துக்கும் மேலான நீதிபதிகளுக்கு கீழ் 70க்கும் மேற்பட்ட சாட்சிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களாக்கப்பட்டோரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா அவர்களின் தலைமையில் அவரது சட்ட உதவியாளர்கள் பாரிய பங்காற்றி அரசியல் கைதிகளுக்கு  நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இவ் வழக்கின் தீர்ப்பு கடந்த மே மாதம் வழங்கப்பட திகதி குறிக்கப்பட்ட போதும் தற்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி புதியவர் என்பதால் வழக்கின் கோவையை படிக்க வேண்டும் என ஒவ்வொரு தவணையிலும் நாள் குறித்து ஆறு மாதங்கள் கடந்த பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்புக்கு நீண்ட காலம் சென்றாலும் கிடைத்த நீதிக்காக அரசியல் நீதிக்காக போராட்டங்களை நடத்தும் மக்களாக மகிழ்வோம்.எஞ்சி இருக்கும் அரசியல் கைதிகளும் நீண்ட காலம் சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டேனும் நீதிமன்றம் அவர்களை விடுவிக்க வேண்டும். 

அரசியல் ரீதியில் அவர்களுக்கான விடுதலை  என்பது  அரசிடம் இனியும் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை. அவ்வாறு அவர்களை  விடுவிப்பதற்கான அரசியல் கூட்டு முயற்சியும் எம் அரசியல் தலைமைத்துவங்களிடம் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று விடுதலை செய்யப்பட்டவர்களில் கனகரத்தினம் ஆதித்தன் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா  ஆகியோர் மீதான கொலை குற்றச்சாட்டுகள் இருந்து குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விடுவிக்கப்பட்டவர்கள் பதினைந்து வருட காலமாக பிணையின்றி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இளமையில் கைது  செய்யப்பட்டு தற்போது இளமையை கடந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குடும்ப உறவுகளோடு கூடி வாழ்ந்து அவர்களுக்காக வாழ வேண்டிய காலத்தையும், தமது எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளையும் இழந்துள்ளனர். இவர்களின் இளமை கொலை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நட்ட ஈட்டை கொடுப்பது யார்? எந்த சட்டம்? எந்த நீதிமன்றம் இவர்களுக்கு நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்கும். அதேபோன்று அநியாயமாக இவர்களை குற்றவாளிகளாக்க முயற்சித்த அரசு தரப்பினர் பயங்கரவாதிகளாவர். இவர்களை பயங்கரவாத தடை சட்டம் கைது செய்யுமா? 

பயங்கரவாத தடை சட்டத்தினை உருவாக்கியவர்கள்,அதனை 44 வருட காலமாக பாதுகாத்து தமிழர்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் அழித்து வருபவர்கள் பயங்கரவாதிகள் என்று கூற வேண்டும். தற்போது  பயங்கரவாத தடை சட்டத்தை விட பயங்கரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

அதுவும் பயங்கரவாதமே. இத்தகைய பயங்கரவாத செயலை ஒட்டுமொத்த நாட்டு மக்களும்  ஜனநாயக ரீதியில்  தடுக்காவிடின் முழு நாடும் எதிர்காலத்தை இழக்க வேண்டி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply