சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் குரன – கட்டுநாயக்கவுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து இன்று திடீரென நிறுத்தப்பட்டது.
சிலாபம் – கொழும்பு ரயில் பாதையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் காணப்பட்ட படுக்கைக்கு பயன்படுத்தும் மெத்தை ஒன்று ரயில் சக்கரத்தில் சிக்கியமையால் குறித்த ரயில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறித்த ரயில் சில்லுக்குள் மெத்தை சிக்கி துண்டு துண்டுகளாகியதால், ரயிலின் வால்வு ஒன்று உடைந்து போனதாகவும் அதனால், ரயில் இஞ்சினுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் , சுமார் இரண்டு மணிநேரம் ரயில் போக்குவரத்து தாமதமானதாகவும், உடைந்து போன வால்வு மீண்டும் பொருத்தப்பட்ட பின்னரே ரயில் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாகவும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
சிலாபம் – கொழும்பு ரயில் மார்க்கத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவரினால் ரயில் பாதையோரத்தில் உலர வைத்திருந்த மெத்தை ஒன்றே இவ்வாறு ரயில் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, ரயில் பாதையோரத்தில் வசிப்பவர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.