ஜனாதிபதி அவர்கள் இன்றைய கால கட்டத்திக்கு ஏற்றவாறு வரவு செலவு திட்டத்தை அழகான முறையில் வழங்கியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஜனாதிபதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
வரவு செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்றையதினம்(14) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
இந்த வரவும் செலவு திட்டமானது இந்த பொருளாதார தாக்கத்தில் அழகான முறையில் வடிவமைத்து தந்த கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றைய கால கட்டத்தில் கல்வி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் எங்கு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில் உலகில் ஏனைய நாடுகளோடு போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். அவ்வாறு கல்வியின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் நாடு அபிவிருத்தி அடைய முடியும். கல்விக்காக சிறந்த முறையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. இது எங்களுக்கு சந்தோசத்தை தருகிறது.
விவசாயத்துக்காக பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நவீன உலகுக்கு ஏற்ப ஏற்றுமதி விவசாயமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எது இலங்கைக்கு பாரிய நன்மை பயக்கும் ஒரு திட்டமாகும். இதிலே தான் எமது பொருளாதாரம் தங்கியுள்ளது.
குறிப்பாக வடக்கில் நன்னீர் மீன்பிடி வளர்ப்பை மேம்படுத்த 500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைக்கும்.
காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 20 லட்சம் குடும்பங்களுக்கு காணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு காணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காணி
பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நான் நம்புகிறேன். இது எமது மக்களுக்கு கிடைத்த வரமாகும்.
வன்னி பிரதேசத்தில் வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மல்வத்து ஓயா செயடற்பாடுகள் ஆரம்பித்து நிறைவு பெறாமல் உள்ளது. இந்த வரவு செலவு நிதி ஒதுக்கீட்டில் அது நிறைவு பெறும் என நான் நம்புகிறேன். இதன் மூலம் குடிநீர் பிரச்சினைகள், விவசாய தண்ணீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறான சிறந்த வரவு செலவு திட்டத்தை தந்த ஜனாதிபதிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
அத்துடன் நாங்கள் மனம் வேதனைப்படும் கால கட்டத்தில் இருக்கிறோம். இஸ்ரேல் – பலஸ்தீன தாக்குதல் வேதனையானது. அந்த போரில் கட்டிடங்கள் நிர்மூலமாக்கப்பட்டது. மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. அங்கே உண்மையில் மனித அவலமே நடந்துகொண்டு இருக்கிறது. எனவே அங்கு உயிர் நீத்த அனைவருக்கும் எனது பிரார்த்தனையை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இது தொடர்பாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம் என்று கூறிக்கொள்கிறேன். அத்துடன் எனது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். என மேலும் தெரிவித்துள்ளார்.