ரணிலின் இறுதி வரவு செலவுத் திட்டம் இதுவே…! சஜித் தரப்பு சவால்…!samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இறுதிப் பாதீடு இதுவாகவே அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களுமே நாடு வங்குரோத்தடையக் காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இன்னமும் சிலர் ராஜபக்சக்களுக்கு சோரம் போகும் வகையில் சபையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆடை அணிந்து கொண்டா அவர்கள் உரையாற்றுகின்றனர் எனத் தெரியவில்லை.

வரி நிவாரணம் வழங்கியதால்தான் கோத்தாபய ராஜபக்ச இல்லாமல்போனார் எனக் கூறுகின்றனர். தனது சகாக்களுக்கே கோத்தாபய ராஜபக்ச வரி விலக்களித்தார். 

30 வீதத்தால் வரி வருமானத்தைக் குறைத்து, அரசின் வருட வருமானத்தை 680பில்லியன் ரூபாவால் குறைத்துத்தான் நாட்டை வங்குரோத்தடையச் செய்தனர். இவருக்குத் தண்டனை வழங்கக்கூடாதா?

சட்டம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் இவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடுத்து, சிவில் உரிமைகளை இல்லாது செய்ய வேண்டும். 2கோடியே 20 இலட் சம் மக்களை பள்ளத்தில் தள்ளியவர்கள் இவர்கள். அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் இறுதி பாதீடாகவே இது அமையும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply