யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் ஆட்கொணர்வு மனு மீதான உண்மையை கண்டறியும் விசாரணையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு யூன் மாதம் 19 ஆம் திகதி நாவற்குழி பகுதியில் 24 பேர் காணமல் போனமை தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆட்கொணர்வு மனுவின் மீதான உண்மை கண்டறியும் விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் விண்ணப்பதாரர் தரப்பின் சாட்சிகளில் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் தவிர ஏனைய சாட்சிகள் அனைவரும் முன்னர் சாட்சியமளித்திருந்தனர்.
குறித்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பி்ல் அவர்கள் பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டமையை உறுதிப்படுத்தி 31.10.2003 திகதியிட்டு மனித உரிமை ஆணைக்குழுவினால் அவணமொன்று மனுதாரர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆவணத்தை நிரூபிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்குமாக மனித உரிமைக்குழுவின் சார்பில் முதலில் குறித்த ஆவணம் வழங்கப்பட்ட சமயம் உறுப்பினராக இருந்த நபர் ஒருவருக்கும் பின்னர் மனித உரிமைக்குழுவின் செயலாளருக்கும் மன்றினால் அழைப்புக்கட்டளை அனுப்பப்பட்டிருந்தது.
ஆயினும் தமது உறுப்பினர்களோ அலுவலர்களோ திறந்த நீதிமன்றில் சாட்சியமளிக்கப்படுவதிலிருந்து மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக குறித்த முன்னாளர் உறுப்பினர் நேரடியாக மன்றில் முன்னிலையாகியும் செயலாளர் கடித மூலமும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த தவணை 09.11.2028 ஆம் திகதி சாவகச்சேரி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி அம்பிகள் ஸ்ரீதரனின் அனுசரணையில் மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி அசேல சேரசிங்ஹா முன்னிலையானார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் செயலானரும் குறித்த ஆவணம் தொடர்பில் நேரடியாக மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்.
இருந்த போதிலும் குற்றவியல் நடமுறைக் கோவையின் பிரிவு 439 இன் கீழ் நடைபெற்று வரும் உண்மை கண்டறியும் விசாரனையில் ஆவணம் ஒன்று தங்களால் வழங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்தான அறிக்கையினை தபால் மூலம் சமர்ப்பிக்க முடியும் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு கட்டளையிடுமாறு மன்றைக் கோரினார்.
குறித்த விண்ணப்பத்தை ஆட்சேபித்த பிரதி மன்றாடியார் நாயகம் சேத்திய குணசேகர் அவர்கள் ( Additional Solicitor Gieneral குறித்த ஆவணமானது முற்கூட்டியே திட்டமிட்ட ஒன்று (pre planned( எனவும் ஏனெனில் குறித்த ஆவணத்தில் ‘பாதுகாப்பு படையாள் அழைத்துச் செல்லப்பட்டார்’ என்ற வாசகமும், இன்னும் பல வாசகங்களும் பிரின்ட் செய்ய்பபட்டுக் காணப்படுவதாக மன்றில் சுட்டிக்காட்டினார்.
அது மட்டும் அல்லாது மனித உரிமைகள் ஆணைக்குழு முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் நபர்களின் பெயர் விபரங்கள் மாத்திரம் கையால் எழுதப்பட்டுக் காணப்படுவதாகவும் மேற்குறித்த ஆவனமானது மனித உரிமைகள் ஆணைக்குவினால் உரிய விசாரணைகள் நடாத்தப்படாமல் முன்னரே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி மன்றாடியர் நாயகம் சேத்திய குணசேகர மன்றுக்குத் தெரிவித்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றமானது மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவர்களால் வழங்கப்பட்ட குறித்த ஆவணத்தினை தம்மால் வழங்கப்பட்டதா இல்லையா என கடிதம் மூலம் தெரிவிக்குமாறு கட்டளை ஆக்கியது.