மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் உள்ள தண்ணீர் பாலர் குடியிருப்பில் உள்ள மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான சுமார் 1531 ஏக்கர் காணியை மன்னார் புது குடியிருப்பைச் சேர்ந்த சிலர் அடாத்தாக பிடித்து அடைத்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் காணி கொள்ளையில் ஈடுபட்டு வரும் அமானி என்பவர் உள்ளடங்களாக சுமார் 15 பேர் இவ்வாறு காணி கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான குறித்த காணியை புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்கள் அடாத்தாக பிடித்து அக்காணியை துப்புரவு செய்து எல்லையிட்டு சுற்று வேலி அடைத்து வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் ஆயர் இல்லத்தைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் சிலர் பல தடவை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் கிராம மக்களுக்கும் காணி மோசடியில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கும் இடையில் தொடர்ந்தும் தர்க்க நிலை ஏற்பட்டு வருகிறது.
குறித்த காணி மோசடியில் ஈடுபட்டு வருகின்றவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் சிலர் உள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
காணிகள் இவ்வாறு அடாத்தாக பிடிக்கப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்விடயம் தொடர்பாக கிராம மக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இப்பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுகின்றமையினால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கால்நடைகளின் மேய்ச்சல் என்பனவும் பாதிக்கப்படுகின்றது.
எனவே மன்னார் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

