எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குள் நுழைந்த மக்கள் – அதிகாரியின் காரை முற்றுகையிட்டு கேள்வி!

லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயுவின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இன்று (16) நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டனர்.

இதற்கமைய, லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இன்று காலை 10 மணியளவில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்தனர் 

இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அபிமானி ஜனசக்தி கட்சியின் தலைவர் பிரதீப் சார்ள்ஸின் ஏற்பாட்டில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினரும் வெற்று லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் அதிகார சபைக்கு வருகை தந்து, அதிகார சபையின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி கோரினர்.

இதனையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகார சபையின் தலைவரைச் சந்திப்பதற்கான அனுமதி கிடைக்கும் வரை அங்கிருந்து செல்லப் போவதில்லை எனவும் குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

லஃப்ஸ் எரிவாயுவின் (Gas) விலை திடீரென அதிகரிக்கப்பட்டமையால் நுகர்வோர் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமையைச் சுட்டிக்காட்டியும், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இப்பேராட்டம்  இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்த லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவரின் காரை பொதுமக்கள் சிலர் வழிமறித்துள்ளனர்.

இதன்போது, எரிவாயு விலை குறைக்கப்படுமா எனக் கேட்டு காரின் கதவைத் திறந்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திடீரென அதிகரிக்கப்பட்டிருந்தன.

இதன்படி, 4,965 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

அதேவேளை, 1,988 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 2,720 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

Leave a Reply