ஒலிம்பிக் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பரிசுத் தொகை தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஆண்டு எதுவாக இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நிதிப் பரிசுகளை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவிற்கு புதிய ஈட்டித் தொகுதியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு போட்டியிலும் வீரர்கள் வெற்றிபெற்றால், அவர்களுக்கான பரிசுத் தொகையை வழங்கக்கூடிய வகையில் கொள்கைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரங்களைத் தயாரித்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் வெற்றிபெற்ற பின்னர் மாத்திரம் பரிசுத் தொகை குறித்து விவாதிப்பதைவிட, அதற்கான கொள்கைப் பின்னணியை முன்கூட்டியே உருவாக்குவது முக்கியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சுமார் 1,900 பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து, விசேட திறமைகளைக் கொண்ட வீரர்களுக்குப் பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply