மன்னார் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விசேட விழிப்புணர்வு நிகழ்வு நாளை (நவம்பர் 17) காலை 9 மணிக்கு மன்னாரில் நடைபெறவுள்ளது.
மன்னார் நகர சபையின் நகர முதல்வர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் உணவு உற்பத்தி நிலையங்களை சுகாதாரமான முறையில் நடத்துதல், உணவுப் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் லேபிளிடல் மற்றும் உணவு கையாளும்போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
அத்துடன், உணவுத்துறை வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு, அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகள் வழங்கப்படவுள்ளன.
எனவே, மன்னார் மாவட்டத்திலுள்ள உணவகங்கள், பேக்கரிகள், உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட உணவுத்துறையுடன் தொடர்புடைய அனைவரும் நாளை காலை 9.00 மணிக்கு கட்டாயம் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் தரமானதுமான உணவை வழங்குவதற்காக உணவுத்துறை வர்த்தகர்களின் சுகாதார அறிவையும் நடைமுறைத் திறனையும் மேம்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.


