50 கிராம் போதைப்பொருள் வழக்கு – 40 ஆண்டுகள் சிறை

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், 1 மில்லியன் ரூபா தண்டப்பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா  தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மன்னார் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். 

அவரிடமிருந்த ஐஸ் போதை பொருள் பொதியுடன் சேர்த்து 54 கிராம் 40 மில்லிகிராம் மீட்கப்பட்டது.

அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது தூய நிலையில் 3.38 கிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதனையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தேக நபருக்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் மற்றும் எதிரி தரப்பு சாட்சியங்கள் யாவும் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன. 

விசாரணைகளின் முடிவில், எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.

தண்டனைக் குறைப்புக்கான விண்ணப்பத்தின் போது, எதிரி இளம் குடும்பஸ்தர் என்றும், ஒரு சிறிய குழந்தையின் தந்தை என்பதால் அவரைத் திருந்துவதற்கு நீதிமன்றம் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் எதிரி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், நீதிமன்றம் பின்வரும் முக்கிய அவதானிப்புகளை முன்வைத்து அக்கோரிக்கையை நிராகரித்தது.

 எதிரி இவ்வழக்கில் கைது செய்யப்படுவதற்குக் இரண்டு மாதங்களுக்கு முன்னர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் குறைந்த அளவிலான நிறையுடைய ஐஸ் போதைப் பொருள் வழக்கு ஒன்றில், குற்றவாளியாக காணப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

நீதிமன்றம் முன்பு வழங்கிய திருந்துவதற்கான வாய்ப்பை அவர் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி, கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருள் அவரது சொந்த நுகர்வுக்காக உடமை கொள்ளப்பட்டதல்ல என்பதையும்,

அது வியாபாரம் செய்யும் நோக்கத்துக்காக வைத்திருக்கப்பட்ட பெறுமதியான பொருள் என்பதையும் கவனத்தில் எடுத்து சட்டத்தினால் விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச தண்டனை எதிரிக்கு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் நெறிப்படுத்தியிருந்ததுடன், தீர்ப்பு வழங்கும் வேளையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி இம்மானுவேல் விக்டர் நேரு தேவவிதுரன் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

தண்டனை பெற்ற மேற்படி நபர், தற்போதும் வேறொரு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply