கனடாவில் குடியேறக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி – இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்!

கனடாவின் முக்கிய பொருளாதாரத் துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களை நாட்டுக்கு வரவேற்க கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC), எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) குடியேற்றத் திட்டத்தின் ஊடாகத் தகுதியான நிபுணர்களைத் தெரிவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த திறமையான பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில்,

– சுகாதாரம் மற்றும் சமூக சேவைத்துறை நிபுணர்கள்.

– தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட தொழிலாளர்கள்.

– கல்வித்துறை சார்ந்தவர்கள்.

– விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளின் நிபுணர்கள்.

– போக்குவரத்துத் துறை பணியாளர்கள்.

ஆகியோர் முன்னுரிமைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கனடாவில் பணி அனுபவம் கொண்ட மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயர் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றுபவர்களுக்கும் குடியேற்ற வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை, பிரெஞ்சு மொழியில் சிறந்த தேர்ச்சியைக் கொண்டவர்களும் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தற்போதைய தொழிலாளர் படையை வலுப்படுத்துவதுடன், நாட்டின் முக்கிய பொருளாதாரத் துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்பது கனடாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற விரும்பும் திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களின் விண்ணப்பங்களை நிர்வகிக்கும் குடியேற்ற முறைமையாகும்.

குறிப்பிட்ட கல்வித் தகைமைகள், தொழில் அனுபவம் மற்றும் மொழித் திறன்களைக் கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தின் ஊடாக நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பைப் பெற முடியும்.

இந்த அறிவிப்பு, கனடாவில் குடியேற விரும்பும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திறமையான தொழில்முறை நிபுணர்களுக்கும் புதிய குடியேற்ற வாய்ப்புகளை ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply