யாழ். இரட்டைச் சகோதரிகளின் மரணத்தில் வெளிவரும் மர்மங்கள்! குடும்பத்தினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் தீயில் எரிந்து உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என அவர்களது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த 01.08.2026 அன்று க.பொ.த உயர்தரப் பிரிவில் கல்வி பயின்று வந்த குறித்த இரட்டைச் சகோதரிகள் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், உயிரிழந்த சகோதரிகளில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது வழங்கிய மரண வாக்குமூலத்தில், தாங்களாகவே தீ மூட்டிக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த வாக்குமூலம் அச்சுறுத்தலின் காரணமாகவே வழங்கப்பட்டதாகவும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு கூறியதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின்படி, 

 

சம்பவத்தன்று ஐவர் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அவர்களில் ஒருவர் சகோதரிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சாட்சியை உண்மையை வெளிப்படுத்தினால் ஆபத்து ஏற்படுத்துவதாக அச்சுறுத்தியதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டின் வராந்தாவில் காணப்பட்ட எரிந்த அடையாளங்கள் தொடர்பிலும் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அங்கு காயவைக்கப்பட்டிருந்த ஆடைகளே தீயிட்டு எரிக்கப்பட்டிருந்ததாகவும், சகோதரிகள் எரிந்த இடம் அதுவல்ல எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், வீட்டுக்குள் சகோதரிகள் இருவரும் அருகருகே எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர்கள் தாங்களாகவே தீ மூட்டியிருந்தால் வீட்டுக்குள் உருண்டு புரண்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டிருக்க வேண்டும் எனவும் குடும்பத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வீட்டின் பின்புறத்தில் இரண்டு கையுறைகள் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும், அண்மையில் வீட்டின் முன்புறம் வாழை மரத்துக்கு அருகில் குழி தோண்டியபோது மற்றுமொரு கையுறை கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மண்ணெண்ணெய் கொள்கலனின் கைப்பிடியில் கைரேகைகள் இல்லாத நிலையில், அதன் கீழ்ப்பகுதியில் விரல் அடையாளங்கள் காணப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். மண்ணெண்ணெய் கொள்கலனும் தீப்பெட்டியும் அருகருகே வைக்கப்பட்டிருந்தமையும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் உள்ள பற்றைக்காணியில் ஆடைகள் எரிக்கப்பட்ட அடையாளங்கள், வீட்டில் காணாமல் போன தரைப்பாள் துண்டு, வயர் மற்றும் கயிறு போன்ற பொருட்கள் காணப்பட்டதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தின் சுவரில் இரத்த மாதிரிகள் காணப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்யுமாறு பல தடவைகள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், வீட்டுக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள ஆலயத்தின் சிசிடிவி கமரா செயலிழந்திருந்ததாகவும், வீட்டுக்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டின் சிசிடிவி கமராவின் வன்தட்டு (Hard Disk) கழற்றப்பட்டிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சகோதரிகள் இருவரும் கிளப்புக்குச் செல்வதைத் தாம் விரும்பாததுடன், அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்ததால் அவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே அதனைத் தடுத்ததாகவும், அவர்களது ஆடைகளைத் தாம் எரிக்கவில்லை எனவும் அண்ணன் தெரிவித்துள்ளார்.

மரண விசாரணைகளின்போது பொலிஸார் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும், சடலங்களை ஒரு வருடத்துக்கு வெளியே எடுக்க அனுமதிக்கமாட்டோம் என அச்சுறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தவிர ஏனைய கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தமக்குச் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்ட குடும்பத்தினர், தாம் முன்வைத்துள்ள சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply