கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்யும் அல்லது அங்கு வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்கா புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஐரோப்பாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு அறிவிப்பு நேற்று பல்கேரியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கிறிஸ்துமஸ் சந்தைகள், வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் பயங்கரவாத அமைப்புகள் அல்லது தனிநபர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகக்கூடும் என அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் எவ்வித முன் அறிவிப்புமின்றி இடம்பெறக்கூடும் என்பதால், பண்டிகைக் கால நிகழ்வுகள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும்போது கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நாட்டை இலக்குவைத்து உடனடியாகத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவோ அல்லது புதிதாக அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதத் திட்டம் தொடர்பாகவோ இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
மேலும், தங்களைச் சுற்றியுள்ள சூழலைத் தொடர்ந்து அவதானித்தல், உள்ளூர் செய்திகளைக் கண்காணித்தல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்த்தல் மற்றும் உள்ளூர் பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்கப் பிரஜைகளிடம் கோரப்பட்டுள்ளது.




