திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வரும் குறித்த வழக்கில், கடந்த 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, பலாங்கொடை கஸ்ஸபதேரருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று (16) அவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தலைமை நீதவான் ஏ.எஸ்.எஸ். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, பலாங்கொடை கஸ்ஸப தேரர் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்கான தனது விளக்கத்தை தேரர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் அதன் மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதும் அரசாங்கத்தினதும் பிக்குகளினதும் பொறுப்பாகும் எனத் தெரிவித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், உலகளாவிய சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தமை நியாயமானது எனவும் தனது விளக்கத்தில் தேரர் தெரிவித்தார்.
எனினும், அவரது விளக்கத்தைத் தொடர்ந்து, நீதிமன்றத்தைத் தவிர்த்தமை தொடர்பில் அவரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறும், நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் தலைமை நீதவான் உத்தரவிட்டார்.



