மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கம் இன்னும் பல ஆண்டுகள் தமிழர் அரசியல் களத்தில் செயற்பட்டிருக்க வேண்டியவர். கொள்கையில் அவர் ஒருபோதும் நீர்த்துப்போனதில்லை; சமரசம் செய்துகொண்டதுமில்லை. எந்தக் காரணத்துக்காகவும் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதுமில்லை. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இவ்வாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மறைந்த சிவாஜிலிங்கத்துக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகவும் எமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்துகின்றேன். புதுடில்லியில் இருந்தபோது அவரது மறைவுச் செய்தி கிடைத்தது. மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காகச் சென்னைக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் இங்கு வந்து அவரது திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளேன்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. ஏறத்தாழ 24 ஆண்டுகால நட்பு எங்களுடையது. 2002ஆம் ஆண்டு ‘மானுடத்தின் தமிழ் கூடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து ஐந்து பேர் அழைக்கப்பட்டிருந்தோம். அப்போது ஐந்து நாள்கள் இங்கு தங்கியிருந்தோம். அந்த ஐந்து நாட்களும் எங்களுடன் இருந்தவர் சிவாஜிலிங்கம்.
ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் எவ்வாறு தொடங்கியது, அதற்கு முன்னர் அறவழிப் போராட்டம் எவ்வாறு கால் நூற்றாண்டு காலம் நீடித்தது என்பன உள்ளிட்ட பல வரலாற்று விடயங்களை ஒரு வரலாற்றுப் பேராசிரியரைப் போல் எங்களுக்கு விளக்கினார். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள், அவர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், அவை எவ்வாறு மீறப்பட்டன, ஆயுதப் போராட்டம் முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது, போராளிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.
சிவாஜிலிங்கம் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும், எத்தனை நாள்கள் தங்கியிருந்தாலும் என்னைத் தொடர்புகொண்டு நேரில் சந்திப்பார். நான் இருக்கும் இடத்தைத் தேடி வந்து நீண்ட நேரம் உரையாடுவார். தமிழ்நாட்டு அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு, அங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களின் தலைவர்களுடனும் நல்லிணக்கமான நட்புறவைப் பேணி வந்தார். யாருடனும் அவருக்குக் கசப்பான உறவு இருக்கவில்லை. அதேபோன்று புதுடில்லிக்குச் சென்றாலும், அங்கு ஆட்சிகள் மாறும்போது புதிய ஆட்சியாளர்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் புதுப்பித்துக்கொள்வதிலும் அவருக்கு நல்ல அரசியல் உத்தி இருந்தது.
நாம் இன்று ஒரு பெரிய ஆளுமையை இழந்திருக்கின்றோம். எவ்வளவு போர்க்குணம் இருந்தாலும், கருத்தியல் மற்றும் கொள்கை அடிப்படையில் சிந்திக்கக்கூடிய ஆளுமைகள் அவசியம். ஆயுதம் ஏந்திப் போராடும் வலிமை ஒருபுறம் இருந்தாலும், அந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகாமல் பாதுகாப்பதற்கும், காலச்சூழலுக்கு ஏற்ப உத்திகளை மாற்றுவதற்கும், இலக்கைத் தவறவிடாமல் முன்னோக்கிச் செல்வதற்கும் கருத்தியல் புரிதல் அவசியம். அந்த வகையில் சிவாஜிலிங்கம் செயற்பட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. என்றார்.




