முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருக்கான தண்டனை அறிவிப்பு எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID), சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஏழு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
செல்லுபடியாகும் விசா இன்றி பல்வேறு காலப்பகுதிகளில் இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்குப் பொய்யான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவற்றில் உள்ளடங்குகின்றன.



