கிண்ணியா நகர சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

திருகோணமலை, கிண்ணியா நகர சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 உறுப்பினர்களைக் கொண்ட கிண்ணியா நகர சபையில், தவிசாளர் எம்.எம். மஹ்தி (ஐக்கிய மக்கள் சக்தி) சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்துக்கு 12 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் வாக்கெடுப்பு நேரத்தில் வெளிநடப்பு செய்ததுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் சபை அமர்வில் சமூகமளிக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய முன்னணி ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கிண்ணியா நகர சபையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பினர்களில் ஐக்கிய மக்கள் சக்தி 4 உறுப்பினர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 2 உறுப்பினர்களையும், தமிழ் தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலா ஓர் உறுப்பினரையும் கொண்டுள்ளன.

Leave a Reply