மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி பகுதியில், வீட்டின் மேல் கூரையில் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று (30) பிற்பகல் குறித்த வீட்டின் முதலாம் மாடியின் மேல் கூரையில் வீட்டின் உரிமையாளரும், தொழிலாளி ஒருவரும் இணைந்து திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இதன்போது, சவல் ஒன்றைப் பயன்படுத்தி மண்ணை அள்ளி வீசியபோது, வீட்டின் மேல் கூரைக்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியில் சவல் பட்டுள்ளது. இதனால் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
முதலில் ஒருவருக்கு மின்சாரம் தாக்கியதைத் தொடர்ந்து, அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றையவரும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மின்சார சபையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் கருவப்பங்கேணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




