இலங்கையில் கஸ்ரப்படுவதனை விட இந்தியாவிற்கு செல்லலாம்! சார்ள்ஸ் எம்பி 

இலங்கையில் கஸ்ரப்படுவதனை விட இந்தியாவிற்கு செல்லலாம் என்ற கதை மக்கள் மத்தியில் புதிதாக ஆரம்பித்திருக்கின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமை காரணமாக இந்தியாவிற்கு ஒருசில குடும்பங்கள் பயணித்திருக்கின்றது. தற்போது இலங்கையில் நெருக்கடியான நிலை உருவாகியிருப்பது உண்மையான விடயம்.
ஏனென்றால் அத்தியவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது இதனால் சாதாரண வருமானம் உடைய குடும்பங்கள் அல்லது வருமானம் மிக குறைவான குடும்பங்கள் வாழ முடியாத சூழ்நிலை இருக்கின்றது.

அதனைவிட ஒரு பொருளை பெற்று கொள்வதற்கு வரிசையில் நின்று தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இலங்கையில் உருவாகியிருக்கின்றது.

எரிபொருள், பால்மா, எரிவாயுவாக இருக்கலாம் இவ்வாறான பொருட்களை பெற்றுகொள்வதற்கு மிகப்பெரும் கஸ்ரத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.

சாதாரணமாக நாட்டு அரிசி 200 ரூபாக்குள் வாங்குவது என்பது மிக கஸ்ரமாக இருக்கின்றது. தானியங்களின் விலை அதாவது பயறு 900 ரூபாய்க்கு மேல் வாங்க வேண்டிய நிலை.

சாதாரண மக்கள் அச்சப்படுகின்றார்கள். இப்போதே இந்த நிலை எனில் எதிர்காலத்தில் வாழ்வாதாரத்தை, குடும்பங்களை, பிள்ளைகளுடைய கல்வியை , பசியை எப்படி போக்க முடியும் என்ற அச்சம் மக்களுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கின்றது.

இந்தியாவிற்கு சென்ற குடும்பங்கள் இந்தியாவில் தொடர்பு இருக்கின்ற குடும்பங்களாக இருக்கும் என நினைக்கிறேன். உடனடியாக முடிவெடுத்து சென்றிருப்பார்கள்.

குறிப்பாக மக்கள் இங்கு இவ்வளவு கஸ்ரப்படுவதனை விட இந்தியாவிற்கு செல்லலாம் என்ற கதை பேச்சு வழக்கில் புதிதாக ஆரம்பித்திருக்கின்றது.

ஆகவே இங்கு நெருக்கடி நிலை என்பது உண்மை. இதற்குரிய தீர்வு எப்படி அமையப்போகின்றது என்பது கேள்விக்குறியாகதான் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply