
கொழும்பு, மார்ச் 29
பதவிக்காலம் முடியும் வரை தான் நாட்டின் பிரதமராக நீடிப்பதாகவும் உடனே ஓய்வு பெறப்போவதில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம், பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மகிந்த கூறுகையில்,
நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி. தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.





