தமிழக மீனவர்கள் நெடுந்தீவுக் கடலில் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர் என்றும் விசைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை மயிலிட்டி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

அதேவேளை, வல்வெட்டித்துறையில் இருந்து பயணித்த மீனவப் படகு ஒன்று, தமிழகத்தின் காரைக்கால் கடற்பகுதிக்குள் நுழைந்ததால் தமிழக கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

Leave a Reply