ஐ.நா. அமைதிப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: பேர் பலி

கின்ஷாசா, மார்ச் 31

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சி படைகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைதி காக்கும் பணிகளில் ஐ.நா. அமைதிப்படை ஈடுபட்டுள்ளது.

ஐ.நா.வின் இந்த அமைதிப்படையில் பாகிஸ்தான் ராணுவமும் இடம்பெற்றுள்ளது. இதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலர் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு கிவு மாகாணத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலை பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது.

ஹெலிகாப்டரில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உள்பட ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 8 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பகுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மிக்க பகுதி என்பதால், ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply